பானிபட்டில் 2ஜி எத்தனால் தொழிற்சாலை- பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!
அரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலையில் தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலை, ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் திறன்பெற்றதாகும். நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.