கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும்-போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவு..!!
பெங்களூரு: கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டார்.
நாடு கடத்த வேண்டும்
கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரியும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மந்திரி அரக ஞானேந்திரா பேசியதாவது:- நாட்டின் நலன் கருதி கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்ப வேண்டும். சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தடுப்பு மையத்தை விரிவுபடுத்த…
அப்போது பேசிய டி.ஜி.பி. பிரவீன் சூட், ‘கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை சிறையில் அடைக்க முடியாது. அவர்களை தடுப்பு காவலில் தான் வைக்க வேண்டும். நெலமங்களாவில் உள்ள தடுப்பு காவல் மையம் மிகவும் சிறியது. அந்த தடுப்பு மையத்தை விரிவுப்படுத்த வேண்டும்’, என்று கூறினார். அப்போது பேசிய அரக ஞானேந்திரா, ‘தடுப்பு மையத்தை விரிவுபடுத்த சமூக நலத்துறை நிதி விடுவிக்க வேண்டும்’ என்று கூறினார். இதற்கு மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி பதில் அளிக்கும்போது, அந்த தடுப்பு மையத்தை ஆய்வு செய்து விரிவுப்படுத்துவது குறித்து சமூக நலத்துறை முடிவு எடுக்கும்’ என்றார்.