டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: மத்திய அரசு முடிவு..!!
கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது. விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வதுடன், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு விமான நிறுவனங்கள் தாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திட்டமிடப்பட்ட உள்நாட்டு சேவைகளின் தற்போதைய நிலை மற்றம் பயணிகளின் தேவையை மதிப்பாய்வு செய்த பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கட்டண உச்ச வரம்பை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. 31.8.2022-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது டுவிட்டர் தளத்தில், ‘விமானங்களின் தினசரி தேவை மற்றும் விமான எரிபொருள் விலை போன்றவற்றை கவனமாக பரிசீலித்தபின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான உறுதிப்படுத்தல் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் இந்தத் துறை வளர்ச்சியடையும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ எனறு குறிப்பிட்டு இருந்தார். விமான டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நீக்கும் மத்திய அரசின் முடிவை விமான நிறுவனங்கள் வரவேற்று உள்ளன. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதால் பயணிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.