கோத்தபாய ராஜ்பக்சேவுக்கு புகலிடம் கிடைக்கும் வரையில் அடைக்கலம்: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒ சா!! (படங்கள், வீடியோ)

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு புகலிடம் கிடைக்கும் வரையில் தங்கள் நாடு அவருக்கு அடைக்கலம் தரும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா அறிவித்துள்ளார்.
இலங்கையில் 70 ஆண்டுகாலம் இல்லாத மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நிர்மூலமாகிப் போனது.
இந்த பொருளாதார சீரழிவை சரி செய்ய கோரி இலங்கை மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் விளைவாக முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நாட்டின் தற்காலிக பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே.
ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலக கோரியும் மக்கள் கிளர்ச்சி தொடர்ந்தது. கடந்த ஜூலை 9-ந் தேதி நடைபெற்ற உச்சகட்டமான போராட்டங்களின் போது ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றினர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடினார். மேலும் ஜனாதிபதி பதவியையும் கோத்தபாய ராஜினாமா செய்தார். இதனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி முதலில் மாலத்தீவு நாட்டில் கோத்தபாய தஞ்சமடைந்தார். ஆனால் மாலத்தீவில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு கிளம்பியது. கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.
இதனால் மாலத்தீவில் இருந்தும் வெளியேறி சிங்கப்பூருக்கு சென்று பதுங்கினார் கோத்தபாய ராஜபக்சே. அதேநேரத்தில் இலங்கை போர்க் குற்றங்களுக்காகவும் தமிழினப் படுகொலைக்காகவும் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பலரும் கோத்தபாய ராஜபக்சேவை சிங்கப்பூர் அரசு கைது செய்ய வலியுறுத்தினர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து செல்கிறார் கோத்தபாய ராஜபக்சே. சிங்கப்பூரில் தொடர்ந்து தாம் தங்க முடியாத நிலையில் தாய்லாந்து நாட்டிடம் அடைக்கலம் கோரி இருந்தார் கோத்தபாய.
இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா கூறுகையில், கோத்தபாய ராஜபக்சே வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என கூறியிருக்கிறார். இதனால் தற்காலிகமாக கோத்தபாயவுக்கு தாய்லாந்து அடைக்கலம் தருவது உறுதியாகி உள்ளது.