மந்திரி சபை விரிவாக்கம் செய்தது ஜனநாயக படுகொலை: சிவசேனா கண்டனம்..!!
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கட்சியின் கூட்டணி அரசு பதவி ஏற்று சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது:- ஒரு வழியாக மந்திரி சபை விரிவாக்கம் நடந்து விட்டது. எங்களது அதிருப்தியாளர்கள் கங்கையில் நீராடி விட்டனர். ஆனால் அவர்கள் செய்த துரோகத்தின் பாவத்தை கழுவ முடியுமா?. மந்திரிகளுக்கு பதவி ஏற்பு விழாவில் ஒரு தெய்வீக செயலை செய்து வைத்தது போல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் முகம் பளிச்சிட்டது. மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே 7 தடவை தலைநகர் சென்று டெல்லி முன் தலைகுனிந்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர்களது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. வருகிற 12-ந் தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதற்கு முன் மந்திரி சபை விரிவாக்கத்தின் அவசரம் ஏன்?. இதன் பொருள், நீதித்துறை மீது எந்த பயமும் இல்லை என்பது தான். தங்களது விருப்பத்தை நிறைவேற்ற எதையும் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் கூறினார்.