;
Athirady Tamil News

காஷ்மீரில் ராணுவ முகாமை தகர்க்க முயற்சி- தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் மரணம்..!!

0

இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தை மிக விமரிசையாக இந்த ஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 75-வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் நாடுமுழுவதும் 75 இடங்களில் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுதந்திர தினத்தை இந்தியா இப்படி எழுச்சியுடன் கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்தியாவில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை உறுதி செய்த மத்திய உளவுத்துறை மிக உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தங்களது கைவரிசையை காட்ட பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று புத்காம் பகுதியில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். புல்வாமா சாலை சந்திப்பில் நேற்று இரவு 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலை படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியது. ரஜோரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 பயங்கரவாதிகள் அந்த ராணுவ முகாம் பகுதிக்கு வந்தனர். ராணுவ முகாமை தகர்க்கும் வகையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகளும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் நோக்கில் ஆக்ரோஷமாக தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 2 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் ஆவார்கள். மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலை தொடர்ந்து அங்கு கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. கார்கில் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த முகாம் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு கூடுதலான படைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. முகேஷ்சிங் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ வீரர்களும், போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.