;
Athirady Tamil News

அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம்: செந்தில் !!

0

இ.தொ.கா முன்வத்த 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த அறிவிப்பு வெளியான மறுநிமிடம் முதல் அடுத்த சம்பள உயர்வுக்கான வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தொடர்ச்சியாக கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் அந்த காலத்திற்கு ஏற்ற வகையில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதரத்தை முன்னெடுக்கும் வகையில் நியாயமான சம்பளமாக 1000 ரூபாய் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் முன்னின்றே செயல்பட்டுள்ளார். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சம்பளத் தொகையாகவும் அக்காலத்தில் 1000 ரூபாய் இருந்தது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அமரர் ஆறுமுகன் தொண்டமான் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். அவரது மறைவின் பின்னரும் இ.தொ.கா அவர் முன்மொழிந்த தொகையை அவரின் வழிகாட்டலால் வெற்றிகரமாக செயற்படுத்தியது. ஆயிரம் ரூபா வழக்கு தள்ளுப்படியானது இ.தொ.காவின் வெற்றி மாத்திரமல்ல. இது ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களினதும் வெற்றியாகும். தற்போதைய சூழ்நிலையில் அந்த 1000 ரூபாய் சம்பள தொகை போதுமானதாக இல்லை. எனவே சம்பள தொகை உயர்த்தற்கான நடவடிக்கைகளை இ.தொ.கா முன்னெடுத்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில்தான் சம்பளத்தையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டாமென வழக்குத் தொடுத்தமை மிகவும் கீழ்தரமான செயலாகும்.

தமதுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரக்கூடாதென எண்ணி கீழ்த்தரமாக செயல்படும் தோட்ட நிர்வாகங்களுக்கு இந்நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக தக்க பதிலடியை இ.தொ.கா வழங்கியது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்து சட்டத்தரணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதியை செலவழித்து வழக்காடிவருவதற்கு பதிலாக குறித்த நிதியை தொழிலாளர்களின் நலனை ஊக்குவிக்கும் முகமாக பயன்படுத்தியிருந்தால் குறித்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சிளை அடைந்திருக்கும்.

அதேபோல் இ.தொ.காவின் கெடுப்பிடிகள் தாங்காமல் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தலில் இருந்து வெளியேறி இருந்தாலும் இ.தொ.கா நீதிமன்றம் வரை சென்று கம்பனிகளின் அடாவடித்தனத்தையும் கொட்டத்தையும் அடக்கியுள்ளது. இ.தொ.கா எப்போதும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டே செயல்படும். தோட்டத் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தொடர்ந்து கம்பனிகளுக்கு இ.தொ.கா அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, நீதிமன்றம் வழக்கை தள்ளுப்படி செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாக மறுநிமிடம் முதல் அடுத்த சம்பளக் உயர்வுக்கான நடவடிக்கைளை இ.தொ.கா ஆரம்பித்துள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.