;
Athirady Tamil News

பீகார் சபாநாயகருக்கு எதிராக 24ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம்..!!

0

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி, தமது கூட்டணியின் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். அதை சட்டசபை செயலகத்தில் அளித்துள்ளனர். இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ம் தேதி சட்டசபை கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் என தெரிகிறது. ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.