கொழும்பு துறைமுகத்தில் குறைவடையும் கொள்கலன் பரிமாற்றங்கள்!!
நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன.
இதற்கமைய, கொள்கலன் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து காணப்பட்டுள்ளன.
மேலும்,நாட்டில் நிலவிய நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கு பரிமாற்றங்கள் நகர்த்தப்பட்டுள்ளன.
நாட்டில் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் மாற்றம் இருக்கவில்லை. எனினும் பிரதான கப்பல் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து மாற்று வழிகளை தெரிவு செய்ததாக உள்ளூர் கப்பல் முகவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கொள்கலன்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அலுவலகங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
இதனையடுத்து கொச்சி சர்வதேச துறைமுகம் உட்பட பல தென்னிந்திய துறைமுகங்களில் ஜூலை வரை போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரித்திருந்தது.