சுதந்திர தின கொண்டாட்டம்- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தல்..!!
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15ந் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் மட்டும் புதிதாக 2,726 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், கைகளை அடிக்கடி சுத்தப் படுத்துமாறும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையில், பல மாநிலங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி வருகின்றன. முக கவசம் அணிவதை கட்டயமாக்கி உள்ள டெல்லி அரசு, உத்தரவை மீறுபவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.