வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரியா?: மத்திய அரசு விளக்கம்..!!
கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, வீட்டு வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதாக நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ”அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே, ”இனிமேல் வீட்டு வாடகை 18 சதவீதம் உயரும். ஏனென்றால், மோடி அரசு வீட்டு வாடகை மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கிடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” என்று கூறியிருந்தார். இந்தநிலையில், இக்குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி. கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால்கூட ஜி.எஸ்.டி. கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.