இலங்கைக்கு 2 ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது..!!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடன் உதவியும் அளித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா 2 ராணுவ விமானங்களையும் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையின் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி பிரீஸ் இந்திய வெளியுறவு துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டோர்னியர் ராணுவ விமானத்தை இலங்கை வாங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் 2 ராணுவ விமானங்களை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தற்போது இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய விமானபடையில் பயன்படுத்தப்படுகிறது. அதிநவீன வசதிகள் கொண்ட இந்த விமானம் கடற்படையின் உளவு பிரிவுக்கும் பயன்பட்டு வருகிறது. 2 என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் காலத்தில் மீட்பு பணியில் ஈடுபடுத்தபடுகிறது. இன்னும் ஓரிரு நாளில் 2 டோர்னியர் 228 ராணுவ விமானங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைக்கும் என தெரிகிறது. இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் சூழ்நிலையில் ஆகஸ்டு 15-க்கு முன்பாக இந்த விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களை கடல் படைக்கு பயன்படுத்த இலங்கை திட்டமிட்டு உள்ளது.