கோண்டாவிலில் சர்வதேச மைதானம்; மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனை!!
யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே
மாநகர முதல்வர் இதனை முன்வைத்தார்.
கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லையா என சபையின் சம்மதம் இதன்போது கோரப்பட்டது.
இது தொடர்பில் ஆராய கால அவகாசம் தேவை என மாநகர சபை உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதால் இவ்விடயத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் அமையக் கூடியதாக ஓர் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானம் அமைக்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் மண்டைதீவு பகுதி முன்னர் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”