;
Athirady Tamil News

யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் !!

0

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம்(12) இடம்பெற்றபோதே மாநகர சபை உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் யாழ்.மாநகர சபைக்குமான வரலாற்று பின்னணியானது மிக நீண்டதாகும். இன்று நாங்கள் இருக்கின்ற இடமாக இருக்கட்டும் எதிர்காலத்தில் நாங்கள் இருக்கபோகின்ற இடமாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் நல்லூர் கந்தனின் அருளாசி உள்ளது. ஆண்டாண்டு காலமாக நல்லூர் கந்தப்பெருமானுக்கு யாழ்.மாநகர சபை செய்து வருகின்ற பணிக்கு நல்லூர் கந்தன் அருளிய செங்கோலுடன் தான் இந்த உயரிய சபை செயற்படுகின்றது. அந்த வரலாற்று பந்தத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நாம் செயற்படுவது உகந்தது அல்ல.

2020 ஆம் ஆண்டு ஆனோல்ட், மாநகர முதல்வராக இருந்தார். அவர் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் வெளிநாடு ஒன்றுக்கு பயணமானதால் மாநகரத்தின் பதில் முதல்வராக பிரதி முதல்வர் து.ஈசன் பதவி வகித்தார். அப்போது (2020 ஆண்டு) நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றினை செய்திருந்தார்.

அவ் ஊடக சந்திப்பில் கொரரோனா தொற்றுக் காரணமாக காவடிகள் அங்க பிரதட்டை உட்பட எந்த ஒரு நேர்த்திக்கடன்களையும் பக்கதர்கள் செய்ய முடியாது அன்னாதனம் வழங்க முடியாது என்று கூறியிருந்தார். 2020 ஆண்டு நடாத்திய குறித்த செய்தியாளர் மாநாட்டின் காணொளியினை இம் முறை நல்லூர் திருவிழா காலத்தில் தன்னுடைய முகப்புபுத்தகம் வாயிலாக மீண்டும் பகிர்ந்திருக்கின்றார். இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு குழப்பநிலையை உருவாக்கின்றார்.

அதுமட்டுமின்றி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதி முதல்வர், 2020 ஆண்டு நான் பதில் முதல்வராக இருந்த காலத்தில் கெரோனா தொற்றுக் காரணமாக நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நடைபெறுமா இல்லையா என்று கேள்விக்குறியாக இருந்த போது தான் ஜனாதிபதி செயலகம் சுகாதார அமைச்சு போன்ற மட்டங்களுக்கு கடிதங்களை அனுப்பி 50 பேர் மட்டும் தான் உட் செல்வதற்கு இருந்த அனுமதியினை அதிகரித்து அந்த உற்சவத்தை நடாத்தியிருந்தோம் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பொறுப்பற்றதனமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கினார்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் வெளி வீதி வருவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று கருத்துக்களை தெரிவித்தார்.

நல்லூர் கந்தப் பெருமான் வெளிவீதி வருவதற்கும் மாநகர முதல்வருக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது. அந்த புரிதல் கூட இல்லாமல் ஒரு மாநகரத்தின் பிரதி முதல்வர் செயற்படுவது நகைப்பிற்குரியது.

அக 2020 ஆண்டு திருவிழா தன்னால் தான் நடந்தது போலவும் 2021 ஆண்டு திருவிழா நடைபெறுவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக பொய்யான விடயங்களினை ஊடங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் சைவத்தமிழ் மக்களின் அடையாளம் என்பதனையும் தாண்டி அது யாழ்ப்பாணத்தின் அடையாளமாகப் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற நிலையில் நல்லைக்கந்தன் உற்சவத்திற்கு யாழ்.மாநகர சபை செய்கின்ற பணி வருமானத்தினை கருத்திற் கொண்டானது அல்ல. அது வரலாற்றுரீதியான தெய்வீகப் பணி எனவே அப் பணி தொடர்பில் தனக்கிருக்கின்ற ஆர்வகோளாறினால் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடங்களுக்கு வழங்குவதனை கண்டிப்பதோடு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.