தனது போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை !!
காலி முகத்திடல் போராட்டம் நிறைவடைந்தாலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த பேராயர், தற்போதைய ஜனாதிபதி இதற்கு சாதகமாக செயற்பட்டால் மாத்திரமே அவரை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (14) நடைபெற்ற புனித பாப்பரசர் பிரான்சிஸால், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்கள் (சுமார் நான்கு கோடி ரூபா) நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என பாப்பரசர் பலமுறை அழைப்பு விடுத்துள்ள போதிலும் இலங்கையில் நீதி கிடைப்பது அரிதாகவே காணப்படுவதாகவும் அரசியல் தலைவர்கள் சட்டத்தில் தலையிடுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.