ஆகஸ்டு 14-ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கும் பாஜக- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமித் ஷா அஞ்சலி..!!
1947ம் ஆண்ட நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 14ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக பாஜக அனுசரித்து வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களிலும் மற்றும் பிற இடங்களிலும் கண்காட்சிகளை நடத்தவும் அமைதி பேரணி நடத்தவும் 6 நபர் கொண்ட குழு ஒன்றையும் அக்கட்சி உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பிரிவினை கொடுமை நினைவு தினத்தில், 1947ல் பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித் ஷா, தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்: ஆகஸ்டு 14-ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கும் பாஜக- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமித் ஷா அஞ்சலி இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், அவர் கூறியுள்ளதாவது: 1947ல் நடந்த நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட இந்திய வரலாற்றின் மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை என்றும் மறக்க முடியாது. பிரிவினையின் வன்முறை மற்றும் வெறுப்பு லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றதுடன், எண்ணற்ற மக்கள் இடம் பெயரக் காரணமானது. பிரிவினையின் கொடூர நினைவு தினமான இன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவணங்குகிறேன். பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் வலிகளை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதாகவும், நாட்டில் எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாட்டு மக்களை ஊக்குவிக்கவும் இந்த நினைவு தினம் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.