;
Athirady Tamil News

இன்று 75-வது சுதந்திர தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடி ஏற்றுகிறார்..!!

0

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவிக்கிறார். ஜொலிக்கும் தலைநகர் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்து வருகின்றனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர சென்னை தலைமைச்செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டிடம், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள் என பெரும்பாலான இடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கண்ணை கவரும் வகையில் தலைநகரமே இரவில் ஜொலித்து வருகிறது. திரும்பிய திசை எல்லாம் மூவர்ண கொடி பெரும்பாலான இடங்களில் சாலையோர மரங்களில் அலங்கார மின்விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டிடங்களில் தேசியக் கொடியின் மூவர்ணம் ஒளிரும் வகையில் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. சென்னை நகரின் முக்கிய இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் வண்ண விளக்குகள் ஜொலித்து வருவது, இரவை பகலாக்கும் வகையில் உள்ளது. பலரும் தங்களது வீடுகளையும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க விட்டுள்ளனர். சிலர் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களையும் விளக்குகளால் ஒளிரச்செய்து 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.