யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று வாள்வெட்டு!!
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட் டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரப் பகுதி மற்றும் மாகியப்பிட்டியில் நடந்துள்ளன. மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுக்களே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளன .
மானிப்பாய்
மானிப்பாயில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மானிப்பாய் நகரப் பகுதியில் உள்ள வணிக நிலையத்தில் பணிபுரியும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே கையில் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகியுள்ளார். மாலை 6.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது . சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாகியப்பிட்டி
மாகியப்பிட்டியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த 27 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளார். சூரிய உதயம் சனசமூக நிலையம் அருகில் நின்றிருந்த இளைஞன் மீது 4 மோட்டார்சைக்கிள்களில் வந்த 8 பேர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இந்தத் தாக்குதலில் இளைஞர் படுகாயமடைந்ததுடன், அவரது விரல் துண்டாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”