அரசியல் எதிர்வுகூறல்கள் எதுவும் பிழைத்ததில்லை!!
தேசிய அரசாங்கம்தான், நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமென 2021 மார்ச் 21 இல் கூறியதற்காகவே ராஜபக்ஷக்கள் தன்னைக் கைது செய்ததாகவும், தனது எதிர்வுகூறல்கள் அரசியலில் பிழைத்ததில்லை என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
“நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளில் பிரதானமானவற்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. எரிபொருள், எரிவாயு, இன்னும் பால்மாக்களுக்கு நிலவிய நெருக்கடியும் தட்டுப்பாடும் இப்போது இல்லை. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி ஒரு மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. விலைகள் குறையும் நிலைமைகளும் தென்படுகின்றன.
எம்.பியாகத் தெரிவாகியும் எட்டு மாதங்களின் பின்னரே ரணில் பாராளுமன்றம் வந்தார். பிரதமர் பதவிக்கு ரணிலே பொருத்தமானவரென அப்போதே சொல்லிவிட்டேன். அதுவும் நடந்து, அவர் ஜனாதிபதியாகியும்விட்டார். நெருக்கடியை தீர்ப்பதற்கான 52 மில்லியன் டொலரைப் பெறுவது அவ்வளவு கடினமில்லை என்பதையும் நானே கட்டியங்கூறினேன். இப்போது இவையே நடந்து வருகின்றன.
ராஜபக்ஷக்கள் சூறையாடிய நமது நாட்டின் சொத்துக்களை மீட்டெடுக்கும் பொருளாதார வியூகம் ஜனாதிபதி ரணிலிடமே உள்ளது. கப்பல் வராத துறைமுகம், விமானம் இறங்க முடியாத விமான நிலையம், விளையாட இயலாத மைதானம் என்பவற்றை அமைத்து, தமது வங்கிக் கணக்குகளை பெருக்கிக்கொண்டனர் ராஜபக்ஷக்கள்.
மஹிந்தவின் பெயரில் ஒரு சுடுகாடுதான் இல்லை. ஏனையவை அவரின் பேரிலேயே உள்ளன. 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கி பெற்றுக்கொண்ட “கொமிஷன்” கடன்கள்தான் நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். விற்றல், வாங்கல் நடவடிக்கைகள் உட்பட துறைமுகச் செயற்பாடுகள் சகலதும் டொலரில் இடம்பெற வேண்டும். மேலும் ,ராஜபக்ஷக்களின் பெயரிலுள்ள சகல நிறு வனங்களுக்கும் நாட்டின் பெயர் சூட்டப்படல் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.