விடுமுறையால் பரிசோதனை குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,813 ஆக சரிந்தது..!!
நாடு முழுவதும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந்தேதி பாதிப்பு 15,815 ஆகவும், 14-ந்தேதி 14,092 ஆகவும், நேற்று 14,917 ஆகவும் இருந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1.98 லட்சம் மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 77 ஆயிரத்து 194 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 15,040 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 38 ஆயிரத்து 844 ஆக உயர்ந்தது. தற்போது 1,11,252 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 6,256 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 29 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,098 ஆக உயர்ந்துள்ளது.