பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: காஷ்மீர் பண்டிட் உயிரிழப்பு- மற்றொருவர் படுகாயம்..!!
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.