மின்நுகர்வோர் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மின்னகத்தில் புகார் அளித்தவர்களில் 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதனுடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார் மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். என்று மின்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.