;
Athirady Tamil News

விரிவுரையாளர்கள் பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் : தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்!!

0

விரிவுரையாளர்கள் மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் : தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்

சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனை தீர்மானிப்பவர்கள் விரிவுரையாளர்களே. இலங்கை போன்ற நாடுகளில் விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம், தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொறுமையாக விருத்தி செய்ய வேண்டிய சமூக பிரிவினராக விரிவுரையாளர்கள் காணப்படுகின்றனர். விரிவுரையாளர்கள் மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

பல்கலைகழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான 6 மாத பயிற்சி நெறி இடம்பெற்றது. இப்பயிற்சிப் நெறியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.ஜெஃபர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்: தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்:

பல்கலைக்கழகங்களில் போதியளவு அறிவை வழங்குதல் போதுமானதன்று, அத்தகைய அறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விரிவுரையாளர்கள் என்ற நோக்கில் மாத்திரமின்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப்படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள். பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள் இயல்பாக உயரிய சமூகத் தொடர்புகளை பெறுவதால், உயரிய சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். பல்கலைக் கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணியாற்றுவதற்கான மொழியறிவு, விடய உள்ளடக்கம், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமூக திறன்கள் என்பன போதுமானதாக இல்லை என்று உணரப்பட்டுள்ளது. புத்துணர்ச்சி நோக்கும், தொடர்கல்வி ஊக்கமும், பன்மொழித் தேர்ச்சியும், தகவல் தொழில் நுட்ப தகைமையும், எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்கும் கொண்டவர்களே விரிவுரையாளராக பணியாற்ற முடியும் என்ற புதிய எண்ணக்கரு வலுப்பெற்றுள்ளது. இவ்வாறு செய்யுமிடத்து விரிவுரையாளர்கள் மாறிவரும் வகிபங்கினை வினைத்திறனுடனும், விளைதிறனுடனும், சமூக பொறுப்புணர்வுடனும் நிறைவேற்ற முடியும். இவை தொடர்பான ஆய்வுகளும் எதிர்காலத்தில் ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.