காஷ்மீரில் 6 பேர் மர்மச்சாவு: சிறப்பு விசாரணைக்குழு விசாரணை..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நூருல் ஹபீப், ஷகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், பேரன் சஜத் அகமது ஆகியோர் ஹபீப்பின் வீட்டில் இறந்து கிடந்தனர். ஷகினாவின் மற்றொரு மகள் ரூபினா, மகன் ஜாபர் சலீம் ஆகிய இருவரும் அதை ஒட்டி உள்ள வீட்டில் இறந்து கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. கடுமையான விஷம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில்தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.