திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட சாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பல் கைது..!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மலை மீது ஆதிநாதப்பெருமாள் – ரங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. சங்கக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த பழமையான கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர், கடந்த 2007-ம் ஆண்டு புதிதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 சிலைகளை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையை கொண்டு, சுவாமிமலையில் உள்ள பிரபல சிற்பியிடம் 5 சிலைகளையும் செய்து கொடுக்கும் பணி வழங்கப்பட்டது.
5 சிலைகள் திருட்டு
சிலைகளை அவர்கள் செய்து கொடுத்த நிலையில், 5 புதிய சிலைகளும் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 21-ந்தேதி கோவிலுக்குள் முள்ளிப்பாடியை சேர்ந்த யோவேல் பிரபாகர் (வயது 31) டி.கல்லுப்பட்டியை சேர்ந்த சேகர், சீலைவாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வெங்கடேசன் ஆகிய 3 பேர் புகுந்து, கத்திமுனையில் அங்கிருந்த கோவிலின் செயலாளர் சண்முகசுந்தரம், பூசாரிகள் பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை மிரட்டி, ஒரு அறையில் அடைத்து 5 சிலைகளையும் திருடிச் சென்றுவிட்டனர்.
ரூ.12 கோடிக்கு விற்க திட்டம்
ஆனால், சிலைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து, கோவிலில் உள்ள யாரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிலைகளை விற்கும் புரோக்கர்களான திண்டுக்கல்லை சேர்ந்த பால்ராஜ் (42), தினேஷ்குமார் (24), இளவரசன் (38) ஆகியோரிடம் ரூ.12 கோடிக்கு சிலைகளை விற்றுத்தரும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தவுடன், ரகசியமாக காய்களை நகர்த்தி குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிலை வாங்குபவர் போல், புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோரை அணுகினார். ஆனால், அவர் மீது சந்தேகம் அடைந்த புரோக்கர்கள், சிலைகளை காட்ட மறுத்துவிட்டனர். இதனால், 2 வார காலம் தொடர்ந்து புரோக்கர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசிக்கொண்டே இருந்தார்.
4 பேர் கும்பல் கைது
ஒரு வழியாக புரோக்கர்களை அவர் நம்பவைத்து விட்டார். அதன்பிறகு, புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் சிலைகளை வைத்திருந்த யோவேல் பிரபாகரை தொடர்பு கொண்டு, சிலைகளை கொண்டுவருமாறு கூறியுள்ளனர். அவரும் உண்மையென நம்பி சிலைகளை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுவந்தார். அவருடன் புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோரும் வந்தனர். அப்போது கூடுதல் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் பதுங்கியிருந்த போலீசார், சிலைகளை கொண்டுவந்த யோவேல் பிரபாகர், புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகிய 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். 5 சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஈஸ்வரன் என்ற வெங்கடேசன், சேகர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.