உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியா – நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!!
உலகளவில் பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியாதான் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார். மத்திய செலவினத்துறையின் கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ் ‘இந்தியாவின் தடுப்பூசிகள் வளர்ச்சி கதை’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். டெல்லியில் நேற்று இந்த புத்தகத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகளவில் பயன்படுத்தப்படுகிற அனைத்து தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுபவை ஆகும். பல பத்தாண்டுகளில் உலகளவில் தடுப்பூசி வினியோகத்தில் இந்தியா சிறப்பான பங்களிப்பை தனி ஒரு நாடாக செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசி, ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகிக்கப்படுகிறது. இன்றைக்கு இந்தியா ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக அந்த அளவுக்கு அதிகமாக தடுப்பூசிகளை தயாரிப்பதும், அவற்றை போடுவதும் எளிதான ஒன்று அல்ல. பொது முடக்க காலத்திலும்கூட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்தது. உலகளவில் நமது நாடு தடுப்பூசிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பது இந்தியாவின் மரபணுவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 208 கோடியே 57 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.