ஆந்திராவில் ரூ.50 லட்சம் கேட்டு டாக்டரை கடத்த முயன்ற 3 பேர் கைது..!!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் சோமேஸ்வரராவ். இவர் அங்குள்ள கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். ஆஸ்பத்திரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரராவ் என்பவர் நவீன உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சி மையம் வைப்பதற்கு பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். உடற்பயிற்சி நிலையத்தில் வரும் வருமானத்தை வைத்து கடனை அடைக்க முடியவில்லை. இதனால் டாக்டர் சோமேஸ்வரராவை கடத்தி அவரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை பறிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து தனது நண்பரான ரவி தேஜாவை நாடினார். அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜி என்ற ரவுடியிடம் சந்திராராவை அழைத்து சென்று டாக்டரை கடத்தினால் ரூ.5 லட்சம் தருவதாக கூறினார். அதற்கு அவர் உடன்படவில்லை. அதன் பின்னர் பரமேஸ்வர் என்பவரின் உதவியுடன் காரில் இருந்த நம்பர் பிளேட்டை மாற்றி நடைபயிற்சி சென்று கொண்டிருந்த டாக்டர் சோமேஸ்வரர் ராவை காரில் கடத்தி சென்றனர். காரில் இருந்து கீழே குதித்து கடத்தல்காரர்களிடம் இருந்து டாக்டர் தப்பினார். இதுகுறித்து அவர் ஸ்ரீகாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்பயிற்சி மைய உரிமையாளர் சந்திரராவ் அவரது நண்பர் ரவி தேஜா மற்றும் பரமேஸ்வரர் ஆகியோரை கைது செய்தனர்.