வேப்ப முத்துக்கள் சேகரிப்பதில் கிராம பெண்கள் ஆர்வம்..!!
மருத்துவ குணம் கொண்ட வேப்ப முத்துக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் முத்துக்கள் சேகரிப்பதில் கிராமத்து பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முக்கிய பங்கு
வேப்ப மரத்தை கிராமத்தின் மருந்தகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வேப்ப மரத்தில் வேம்பின் இலை, பூ, விதை, பட்டை, காய், பழம் என அனைத்துமே நல்ல மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக வேப்ப மரத்தில் உள்ள கொழுந்து இலைகள் மனித உடலில் உள்ள சூட்டை தணிப்பதற்கும், அம்மை நோய் வராமல் தடுப்ப தற்கும் வயிற்றில் உள்ள பூச்சியை குணப்படுத்துவதற்கும் உள்ளிட்ட உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப் படுத்துவதில் வேப்பமரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமில்லாமல் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களுக்கு நல்ல உரமாகவும் இந்த வேப்ப முத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக மருத்துவ குணங்களை கொண்ட இந்த வேப்பம் மரத்தால் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு பழங்காலத்தில் இருந்து தற்போது வரையிலும் நல்ல ஒரு வருமானம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே அமைந்துள்ளது புதுஊரணங்குடி கிராமம். உப்பூரில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள புது ஊரணங்குடி கிராமத்தில் ஏராளமான பெண்கள் வேப்ப மரங்களில் இருந்து கீழே விழும் வேப்பம் பழம் மற்றும் காய்ந்து கிடக்கும் வேப்ப முத்துக்களை சேகரித்து அதை சாலையில் வெயிலில் உலர வைத்து வியாபாரிகளிடம் கொடுத்து வருகின்றனர். அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த வேப்ப முத்துக்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருவதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
ரூ.115
இது பற்றி புதுஊரணங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்கூறிய போது, வேப்ப மரமே ஒரு மருத்துவ குணம் கொண்ட மரம் என்று தான் சொல்ல வேண்டும். வேப்ப இலை, வேப்பங்கொழுந்தையும் அப்படியே சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து குணமாகும். தற்போது வரையிலும் வேப்பம் கொழுந்துகள் குழந்தைகளுக்கு மருந்தாக கொடுக்கப்பட்டு வருகின்றன. சிறு வயதில் ஒரு கிலோ 50 ைபசா 1 ரூபாய், 2 ரூபாய் என விற்று உள்ளோம். தற்போது ஒரு கிலோ வேப்பமுத்து ரூ.115 வரையிலும் விலை போகிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து இந்த வேப்ப முத்துக்களை வாங்கி சென்றால் 1 கிலோவுக்கு ரூ.100 கிடைக்கும் அதே வேப்ப முத்துக்களை ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள கடை ஒன்றில் நேரடியாக கொடுத்தால் ரூ.115 கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.