வவுனியாவில் உள்ள அனுராதபுர கால தோணிகல் கல்வெட்டு பகுதி மக்கள் பார்வையிட அனுமதி!! (படங்கள்)
யுத்த காலத்தில் பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்த அனுராதபுர கால தோணிகல் கல்வெட்டு பகுதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா இடமாக மாற்றிமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வவுனியாத் தெற்குப் பிரதேச செயலகத்தின் வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்ட எல்லைக்குட்பட்ட மகாமைலங்குளம் தொல்பொருள் இடமாக வவுனியா நகரத்திலிருந்து ஹொரவப்பொத்தானை செல்லும் வீதியில் உள்ளது.
அங்கு அமைந்துள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்றன. இதனை அண்மித்து 2 புராதன குளங்களும் உள்ளன. இங்கே வரலாற்றுக்கு முந்தைய பாறைக் கற்கருவிகளும் உள்ளன.
இங்கே உள்ள தோணிகல் கல்வெட்டில் அனுராதபுர இராசதானியின் மன்னன் மகாசேனின் மகனாகிய ஸ்ரீ மேகவண்ணனது ஆட்சி நடவடிக்கைகள், மத சடங்குகள், வட்டி முறைகள் மற்றும் பணம் மதிப்பிழப்பு முறைகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் உள்ளன. சில அறிஞர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘யஹிசா பவத கோவில்’ தற்போதைய மதுக்கண்ட கோவில் என்று குறிப்பிடுகின்றனர்.
அதனை சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் ஆதரவுடன் சுற்றுலா இடமாக மாற்றுவதற்கும் தொல்பொருள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு தலைமை அலுவலகத்தின் தொல்பொருள் ஆய்வு அதிகாரி தனுர தயானந்தா, பிரதி (சேகரிப்பு) அதிகாரிகள் ஐ. பி. எஸ். நிஷாந்தா, வவுனியா தொல்பொருள் அலுவலகத்தின் சமரவீர, சுசந்த ஜயதிலக்க, உள்ளூர் ஆய்வாளரான பியம் பெரேரா ஆகியோர் வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டதுடன் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர்.