யாழ் மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த. இன்று மாலை யாழ்ப்பாணம் கல்வியல் கல்லூரியில் யாழ் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது யாழ் மாவட்டத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் அவர் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் எதிர்வரும் காலத்தில் யாழ் மாவட்டத்தில் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் ஆளுமை பற்றாக்குறை என்பவற்றை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் இதன் போது தெரிவித்தார். அத்துடன் துரப்பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைக்கு செல்லும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு உடனடியான தீர்வினை மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாண கல்வி அமைச்சு, வடமகாண மாகாண கல்வி படிப்பாளர்களின் அசமந்தப் போக்கு , இடமாற்ற கொள்கையினை சரியான முறையில் நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பு செய்தல், தற்பொழுது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சனை, போன்றவை தொடர்பில் இதன் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன் கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும் அமைச்சர் இதன் போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், கடல் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கருத்துக்களை முன்வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”