தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- அமித்ஷா வலியுறுத்தல்..!!
தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பேசியதாவது: தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவியேற்றது முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு மட்டுமல்ல, அனைத்துத் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளுடனான நமது எல்லைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்கள் நடைபெறுகின்றன. அது குறித்த தகவல்களைச் சேகரிப்பது மாநில காவல்துறை தலைவா்களின் பொறுப்பு.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. போதை பொருள் சரக்கைப் பிடிப்பது மட்டும் போதாது, போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது மிகவும் முக்கியம். பல்வேறு வகையான குற்றங்கள் குறித்த தரவுத்தளத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அறிவியல் அணுகுமுறையுடன், பணிகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், தொழில் நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.