பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களை விடுவிக்க முயற்சி செய்வேன் – பல்கலை மாணவர்களிடம் கல்வி அமைச்சர் உறுதி!!
கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு என்னாலான முயற்சிகளில் இறங்குவேன் என்றும், வழங்கின் தற்போதைய நிலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசுவேன் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த யாழ். பல்கலைக் கழக மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வமாக வருகை தந்துள்ள கல்வி அமைச்சர், யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (19.08.2022) நண்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் விடுத்த வேண்டுகோளுக்குப் பதலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பேராசிரியர் சிவா சிவானந்தன், பல்கலைக்கழகப் பதிவாளர், விஞ்ஞான பீடாதிபதி, மருத்துவ பீடாதிபதி, மாணவ நலச்சேவை அதிகாரிகள் ஆகியோரும் மாணவர்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில், தெற்கில் முன்னைய காலத்தில் இவ்வாறே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வன்முறைகளின் போது கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். அதே போல இவர்களிருவரையும் விடுவிப்பதற்கான ஏதுநிலைகள் பற்றி சட்டமா அதிபருடன் கலந்துரையாடுகிறேன். இங்கிருந்து கொழும்புக்குச் சென்றதும் உடனடியாகவே இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவேன். நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாமல் செய்வது பற்றிச் சிந்திக்கப்படுகிறது. அது தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்றார்.
மேலும், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் நலனோம்புத் தேவைகள் தொடர்பில் பொருந்தமான அனுசரனையாளர்களை இனங்கண்டு படிப்படியாகத் தீர்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சரும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரும் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.