3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி..!!
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். பனாஜியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது. 10 கோடி மைல்கல்லை எட்டியது நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, 16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர். இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் கூட்டு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.