சி.பி.ஐ. அமைப்பை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை – கெஜ்ரிவால்..!!
டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ இன்று சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் சிறந்த கல்வி மந்திரியாக மணீஷ் சிசோடியா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வந்துள்ளனர். ஏராளமான தடைகள் விதிக்கப்படுகின்றன. டெல்லியில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி அமெரிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் தோன்றுவது சாதாரணமான விஷயம் அல்ல. இது முதல் முறை அல்ல. கடந்த 7 ஆண்டுகளில் மணீஷ் சிசோடியா வீட்டில் ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்டன. அவருக்கு எதிராக ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. தனது கடமையை செய்கிறது. பயப்பட வேண்டிய அவசியமில்லை. சி.பி.ஐ. தனது கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். நம்மை துன்பப்படுத்த வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வந்தாலும் நமது பணியை நிறுத்தமுடியாது என தெரிவித்தார்.