ஹெரோயின் போதை பொருளுடன் வியாபாரி கைது!!
காத்தான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரை 710 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (19) மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பிரதேசத்திலுள்ள வீதி ஒன்றில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது போதை பொருளை விற்பனைக்காக எடுத்து கொண்டு சென்ற வியாபாரியை மடக்கி பிடித்த போது அவரிடமிருந்து 710 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் இவர் அண்மையில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் எனவும் இவர் தொடர்ச்சியாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.