;
Athirady Tamil News

தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயக்கம்- பிரியங்காவுக்கு ஆதரவு அதிகரிப்பு..!!

0

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வைக்க பல தடவை முயற்சி நடந்தது. என்றாலும் ராகுல் காந்தி பிடிவாதமாக தலைவர் பதவிக்கு வர மறுத்து விட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி தொடர்ந்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர் பதவியில் நீடித்து வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமானால் நிர்வாகிகள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 20-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தலைவர் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் காங்கிரஸ் வட்டாரத்தில் காணப்படவில்லை. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் குழப்பத்துக்கும், தவிப்புக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். அவர் மீண்டும் தலைவர் பதவியை ஏற்பாரா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ராகுல்தான் மீண்டும் தலைவராக பதவி ஏற்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ராகுல் காந்தி எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இதற்கு விடை கிடைத்துவிடும்” என்றார். இதற்கிடையே ராகுல் தயக்கத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற மிகப்பெரிய அதிருப்தி ராகுல்காந்தியிடம் இருக்கிறது. மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்தால் மட்டுமே தலைவர் பதவியை ஏற்பேன் என்று அவர் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே? எனவே தலைவர் பதவியை ஏற்றதும் முதலில் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் சர்ச்சை ஏற்படலாம் என்ற தயக்கமும் ராகுல் காந்தியிடம் உள்ளது. இதனால்தான் அவர் சில மாதங்கள் கழித்து தலைவர் பதவியை ஏற்கலாமா என்று ஆலோசித்து வருகிறார். ராகுல் காந்திக்கு தலைவர் பதவி மீது விருப்பம் இல்லாததால் அவரது சகோதரி பிரியங்காவை தலைவர் பதவிக்கு கொண்டு வரலாம் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பிரியங்காவை முன்நிறுத்தினால்தான் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். சோனியா-ராகுல் மீது அமலாக்கத்துறை விசாரணை மீண்டும் நடத்தப்படலாம் என்ற நிலையில் பிரியங்காவை தலைவர் பதவிக்கு கொண்டு வருவது தான் சிறந்தது என்ற கருத்தையும் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் சோனியா குடும்பத்தில் பிரியங்காவை இப்போதே தலைவர் பதவிக்கு கொண்டு வர எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரியங்கா இன்னும் கட்சி நிர்வாகத்தில் பக்குவப்படவில்லை. இப்போதே அவரை தலைவராக்கினால் பா.ஜனதா வேகத்துக்கு முன்பு தாக்குப்பிடிக்க மாட்டார் என்று சோனியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே பிரியங்காவை தலைவராக்க சோனியாவுக்கு தயக்கம் உள்ளது. ராகுல்-பிரியங்கா இருவரும் தலைவர் பதவியை ஏற்காத பட்சத்தில் தொடர்ந்து சோனியா இடைக்கால தலைவராக செயல்பட அனுமதிப்பது என்ற முடிவுக்கு மூத்த தலைவர்கள் வந்துள்ளனர். சோனியாவுக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் 2 அல்லது 3 துணைத்தலைவர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. வட இந்தியாவுக்கு ஒரு துணைத்தலைவரும், தென் இந்தியாவுக்கு ஒரு துணைத்தலைவரும் என்ற வகையில் மூத்த தலைவர்களை தேர்ந்தெடுத்து காங்கிரசை வழிநடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கும் இன்னமும் இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. இதனால் காங்கிரசில் தலைவர் பதவி விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.