நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!
கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. 2010-ம் ஆண்டில், நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பனால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ராமநகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் 2010-ல் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு, ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர், நித்யானந்தா நாட்டை விட்டு ஓடியதால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி லெனின் கருப்பன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு 2020-ல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல், நித்யானந்தாவுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டும், நித்யானந்தா ஆஜராகவில்லை. பின்னர் நாட்டைவிட்டு நித்யானந்தா தப்பிவிட்டதால் அவரின் ஜாமீனை ரத்துசெய்யக்கோரி, மீண்டும் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் கடந்த 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நித்யானந்தா தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த பாலியல் தொல்லை வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் . ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்யானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வருகிறார். அவர் இந்தியாவிற்கு உள்ளேயே தலைமறைவாக இருந்து வருகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டுக்கு அருகே உள்ள ஒரு தீவில் அவர் இருப்பதாகவும், அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக உருவாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கைலாசா நாட்டுக்கு என பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார். யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாக சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார். கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று நித்யானந்தா கூறியதை கேட்டு, பலர் கைலாசாவுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். கைலாசாவுக்கு போய், ஏதாவது வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். ஆனால் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளதால் அவரை கைதுசெய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்யானந்தாவுக்கு வாரண்டை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவு அடுத்த மாதம்(செப்டம்பர்) 23-ந்தேதி வரை செல்லும் என்பதால் அதற்குள் அவரை கைது செய்ய பெங்களூர் போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் வழக்கம்போல வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.