புதுவை சட்டசபை நாளை கூடுகிறது; முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்..!!
சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அதன்பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் ஏப்ரல் முதல் ஆகஸ்டு முடிய 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார். இதன்படி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு ஒரு மாதத்துக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவசர அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசி விட்டு திரும்பினார்.
திடீர் ஒத்திவைப்பு
புதிதாக ஆட்சி அமைத்து 15 மாதங்களாகியும் டெல்லிக்கு செல்லாமல் இருந்து வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவே பிரதமரை சந்திக்க சென்றதாக அரசியல் நோக்கர்கள் இதை விமர்சித்தனர். ஏற்கனவே அறிவித்தபடி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. ஆனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார். பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததே இந்த திடீர் ஒத்திவைப்புக்கு காரணம் ஆகும். இந்தநிலையில் புதுவை பட்ஜெட்டில் ரூ.10,600 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
நாளை கூடுகிறது
இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபை மீண்டும் நாளை (திங்கட்கிழமை) கூடுவதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை சட்டசபை கூட்டப்பட்டு நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையடுத்து பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.