மதுபான உரிமம் முறைகேடு வழக்கு- மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ்..!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா டெல்லி துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதே போல ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 வீடுகளிலும் நேற்று முன்தினம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. முதல் கட்டமாக 3 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்த இருக்கிறது. இதனால் தன்னை ஓரிரு நாட்களில் கைது செய்யலாம் என்று மணிஷ் சிசோடியா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மணிஷ் சிசோடியா வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் சி.பி.ஐ. தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியா இன்று நிருபர்களிடம் கூறும் போது, எனது வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்றும் பிரதமர் தான் நாட்டுக்கு தேவை. சி.பி.ஐ. அமலாக்கத்துறையை பற்றி எப்போதும் சிந்திப்பவர் அல்ல. பிரதமர் மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலம் சோதனைகள் நடத்த எப்போதும் சிந்தித்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றி சிந்திக்கிறார். இதற்கிடையே மணீஷ் சிசோடியா டுவிட்டர் பதிவில் கூறும் போது, உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு பைசா கூட முறைகேடாக கிடைக்கவில்லை. இப்போது மணீஷ் சிசோடியாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறீர்கள். இது என்ன நாடகம் மோடிஜி? நான் டெல்லியில் சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கிறேன். நான் எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள். உங்களால் என்னை கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று தெரிவித்துள்ளார்.