சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி !!
மாகாணங்களில் மட்டுமின்றி மத்தியிலும் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி
வரலாற்று தவறை தொடர்ந்தும் விடும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது. பிராந்திய பிரச்சினைகளையும், பிரதேச அதிகார பரவலாக்கம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்த நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தெற்கிலுள்ள பெரும்பான்மையின மக்கள் தங்களின் தலைமைகளினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புலம் பெயர் தமிழ் மக்களினதும், மத்திய கிழக்கினதும் பங்களிப்பு மிகமுக்கியம் என்று உணர்கின்றனர். இதனால் தான் ஜனாதிபதி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியுள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய தருணமிது. அதற்காக மத்தியிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழ்- முஸ்லிம் ஆகிய இரு சமூகத்திலிருந்தும் இரு உப ஜனாதிபதி பதவிகள். இந்த நிலைப்பாட்டை தான் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் கடந்த 2000 ம் ஆண்டு அரசியலமைப்பு நகலாக பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். அதில் மத்தியில் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் உருவாக்க வேண்டும் என்பதற்காக இரண்டு உப ஜனாதிபதி முறை தேவை என்று வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில் தமிழ்- முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வு வழங்குவது பற்றி பேச வேண்டும். அதற்காக தமிழ் முஸ்லிம் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பலமிக்க முக்கிய சக்திகளாக கொள்ளப்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், எண்ணெய் வளங்கொண்ட அரபு நாடுகளினதும் உதவியினை தமிழ் முஸ்லிம் கட்சிகள் பெற்று இந்த ஆபத்தான காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பங்களிப்பினை செய்கின்ற போது இலங்கையின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை சமூகம் சம்பந்தமாக நல்லபிப்பிராயம் ஏற்படும்.
வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் ஒரு நல்ல நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் அரக்கலவின் பின்னர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நல்லபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சிறுபான்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் நாட்டின் தலைமை இருப்பதனால் இந்த நல்ல நிலையை தமிழ் முஸ்லிம் கட்சிகள் திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் கடந்த 1956 களில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக வண்டா- செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டின் தலைமையாக இருந்த பண்டாரநாயக்க நல்லெண்ணத்தில் இருந்து சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் தெற்கிலுள்ள சிங்கள பெரும்பான்மை இன மக்கள் தேசியவாத, இனவாத கருத்துக்களில் ஆட்கொண்டிருந்தனர். பின்னர் அதன் தொடர்ச்சியாக டட்லி- செல்வா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி செய்த தலைவர்கள் மிதவாத போக்குடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் எண்ணத்துடன் இருந்தாலும் கூட மக்கள் அதை ஜீரணிக்கும் நிலையில் இருக்கவில்லை. அதனால் அந்த இரண்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டவர்களினாலையே கிழித்தெறியப்பட்டது.
வரலாற்றில் ஏறத்தாழ 70 வருடங்களின் பின்னர் மக்கள் சுயமாக கிளர்ந்தெழுந்த அரகல புரட்சியினூடாக தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இனவாதம் குறைக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களின் உரிய சமத்துவத்துடன் வாழ வழிவகுக்கப்பட வேண்டும் என்ற புதிய கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆட்சியிலும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலமையான ரணில் விக்ரமசிங்க அவர்கள் இப்போது முதன்முதலாக ஆட்சிப்பீடத்தில் இருந்து கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் ஆட்சிப்பீடத்தில் இருந்த கோத்தா, மஹிந்தவுடன் ஒப்பிடுகின்ற போது இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது தொடர்பில் பகிரங்க நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்.
விடுதலை புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கூட செய்திருக்கிறார். இவருடைய இந்த குறுகிய ஆட்சி காலத்தில் தமிழ், முஸ்லிம் சமூகம் சில விடயங்களை நேரான சிந்தனையுடன் செய்யவேண்டியுள்ளது. இப்போது 22 வது அரசியல் யாப்பு திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சிறுபான்மையினரின் இனப் பிரச்சினை தீர்வு பற்றியோ அதிகார பரவலாக்கம் பற்றியோ எந்த ஒரு விடயமும் உள்ளடக்கப்பட வில்லை. இவ்வாறான குறைபாடுள்ள ஒரு நிலைமையில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் தொடர்பில் அவர் நல்ல சமிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இந்த காலப்பகுதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, வடக்கு, கிழக்கில் நீண்டகாலம் நிலைகொண்டுள்ள காணிப்பிரச்சினைகள், இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகள், வன இலாகா அம்பாறையில் கைப்பற்றியுள்ள முஸ்லிங்களின் காணிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஜனாதிபதி அறிவிப்பு விடுத்துள்ள சர்வகட்சி ஆலோசனை கொண்ட அரசாங்கத்தை வலுப்படுத்தும் தேவை சிறுபான்மை கட்சிகளுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் சர்வகட்சி மாநாடு அவசரமாக கூட்டப்பட்டு சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் கொள்கைப்பிரகடனம் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைபாடாகும்- என்றார்