தேசிய கொடி அவமதிப்பு: போராட்டக்காரரை தடியால் சரமாரியாக தாக்கிய கூடுதல் கலெக்டர்..!!
பீகாரில் ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராடியவரை, கூடுதல் கலெக்டர் தடியால் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, நேற்று ஏராளமானோர் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது ஒருவர், தேசியக்கொடியை ஏந்தி சாலையில் படுத்து போராடினார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த கூடுதல் கலெக்டர் கே.கே.சிங், போலீசாரிடம் இருந்து லத்தியை வாங்கி, சாலையில் படுத்திருந்த ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார். இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு, ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, இது குறித்து விசாரிக்க பாட்னா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.