நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது..!!
பா.ஜனதா கட்சி செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா, ஒரு டி.வி. விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததால் நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. அவர் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை ராஜாசிங் எம்.எல்.ஏ. தடுக்க முயன்றார். ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். அதன் பின் இந்த வீடியோவை அவர் வெளியிட்டார். ராஜாசிங் எம்.எல்.ஏ.வின் இந்த வீடியோவை கண்டித்து ஐதராபாத்தில் நேற்று இரவு போராட்டங்கள் நடந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அதே போல் ஐதராபாத்தில் மற்ற பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜாசிங் எம்.எல்.ஏ.வை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஐதராபாத் தெற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சாய் சைதன்யா கூறும்போது, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.