விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும்- விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, உலகில் மிகச்சிறந்த நாடாக உருவாக வேண்டும். இதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 535.78 மில்லியன் கால்நடைகளும், 851.18 மில்லியன் பறவைகளும் இருக்கின்றன. இந்திய மக்கள் தொகை அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை உள்ளது. கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்தினால்தான், வேளாண்மை துறை வளர்ச்சி அடையும். வேளாண்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தத் தொழில்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது இப்போதைய தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.