கடப்பாவில் செம்மரம் கடத்திய 10 பேர் கைது..!!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், லங்கமல்லா வனப்பகுதியில் இருந்து செம்மரம் வெட்டி கடத்திச் செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி வெங்கடசிவா, இன்ஸ்பெக்டர் நாகபூஷணம், அனுமந்த நாயக், சப்-இன்ஸ்பெக்டர் நாகப்பிரசாத் மற்றும் போலீசார் பத்வேல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். வாகனங்களில் 44 செம்மரங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் மினி வேனில் வந்த 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரப்பனூரை சேர்ந்த சாமிநாதன் (37), ஜமுனாமரத்தூர் குப்பன் (50), திருப்பத்தூர் அடுத்த உதய மாத்தூர் கண்ணன் (22), வாணியம்பாடி பூங்குளம் சீனிவாசன் (40), நாச்சியார் குப்பம் ராமச்சந்திரன் (40), சின்னத்தம்பி (60), நத்தம் கோவிந்தராஜ் (42), விலாங் குப்பத்தை சேர்ந்த ராஜு (23), வேலூர் மாவட்டம் ஜம்மனமுத்தூர் சங்கர் (45), சேலம் மாவட்டம் நெய்ய மலை செல்வராஜ் (27) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த 6 செல்போன்கள், கார், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.