பா.ஜனதாவில் சேர ரூ.20 கோடி பேரம்- ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் திடீர் மாயம்? டெல்லி அரசியலில் பரபரப்பு..!!
டெல்லியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்-மந்திரி மணீஷ் சிகாடியோ வீடு மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் சேர அழைப்பு விடுத்ததாகவும். அப்படி வந்தால் வழக்குகள் அனைத்தையும வாபஸ் பெற போவதாகவும் ஆசைவார்த்தை காட்டியதாக மணீஷ் சிசோடியா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். ஆம் ஆத்மி கட்சியை உடைக்க மத்தியில் ஆளும் பா.ஜனதா ஈடுபடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும். டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்தால் ரூ.20 கோடி வழங்கப்படுவதாகவும், மற்ற எம்.எல்.ஏக்களையும் உடன் அழைத்து வந்தால் ரூ. 25 கோடி கொடுக்கப்படும் என்றும் அப்படி இணையாவிட்டால் மணீஷ் சிசோடியா போல பொய் வழக்கு தொடரப்படும் எனவும் பாரதிய ஜனதா மிரட்டல் விடுப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சி எம்.எல். ஏக்கள் கூட்டத்தை இன்று தனது இல்லத்தில் அவசரமாக கூட்ட அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதற்காக கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என ஆம் ஆத்மி கருதுகிறது. இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையில் நாளை டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் கூட இருக்கிறது. இதில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.