சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மோதல்- தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் 40 பேர் மீது வழக்கு..!!
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான குப்பத்திற்கு நேற்று 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்தார். அப்போது குப்பம் அடுத்த ராமகுப்பம் பகுதியில் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வருவதால் ஏராளமான கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேசம் கட்சியின் கொடி மற்றும் தோரணங்களை அகற்றினர். இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அவர்களிடம் தட்டிக் கேட்டனர். அப்போது 2 கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாப்பா ரெட்டி நாராயண ரெட்டி ஆகியோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 2 கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கும் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் சம்பவம் குறித்து 2 கட்சியினரும் தனித்தனியாக குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோதல் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்ட 2 கட்சியையும் சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.