ஜார்கண்ட் முதல்-மந்திரி பதவி பறிபோகிறது தேர்தல் கமிஷன் பரிந்துரையால் நெருக்கடி..!!
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்
அங்கு, நிலக்கரி துறையை தன் வசம் வைத்துள்ள நிலையில், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்குத்தானே நிலக்கரி சுரங்கஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷனின் பார்வைக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கொண்டு சென்றது. அதில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 9-ஏ யை மீறி ஹேமந்த் சோரன் செயல்பட்டுள்ளார், எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, அரசு ஒப்பந்தங்களுக்கான தகுதி நீக்கம் தொடர்பானது ஆகும்.
தேர்தல் கமிஷன் விசாரணை
பா.ஜ.க. முறையீட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரன் மீது தேர்தல் கமிஷன் முறையான விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கவர்னருக்கு அறிக்கை
ஹேமந்த் சோரனின்எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக ஜார்கண்ட் கவர்னர் ரமேஷ் பயசுக்கு தேர்தல் கமிஷன் தனது பரிந்துரை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் நேற்று காலை அனுப்பி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 192, ஒரு மாநிலத்தின் எம்.எல்.ஏ. ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக ஏதேனும் கேள்வி எழுந்தால், அந்த கேள்வி கவர்னருக்கு அனுப்பப்படும், அவர்தான் இதில் இறுதி முடிவு எடுப்பார். இது போன்ற கேள்விக்கு எந்த முடிவையும் எடுக்கும் முன்பாக தேர்தல் கமிஷனின் கருத்தை கவர்னர் பெற்று அதன்படி செயல்படுவார் என தெரிவிக்கிறது.
பதவி பறிபோகிறது
எனவே தேர்தல் கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் கவர்னர், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் நிலை உருவாகி உள்ளது. அப்படி எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்கிறபோது, அவரது முதல்-மந்திரி பதவியும் போய் விடும்.
ஒருவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்-மந்திரி ஆகி, 6 மாதங்களுக்கு பதவியில் நீடிக்க முடியும். 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆகி விட வேண்டும். ஆனால் ஹேமந்த் சோரன் விவகாரத்தில் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறபோது, அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோத்தா தொகுதி பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் கமிஷனின் கடிதம் கவர்னருக்கு வந்து சேர்ந்து விட்டது. ஆகஸ்டு மாதத்திற்குள் இது நடந்து முடிந்துவிடும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்” என கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-மந்திரி அலுவலகம் தகவல்
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் இருந்தோ, கவர்னரிடம் இருந்தோ தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று முதல்-மந்திரி அலுவலகம் தெரிவிக்கிறது. இதையொட்டி ஹேமந்த் சோரன் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:- பா.ஜ.க. எம்.பி. உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தாங்களாகவே தேர்தல் கமிஷன் அறிக்கையை தயாரித்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் அது மூடி முத்திரையிட்ட உறையில் உள்ள அறிக்கை ஆகும். அரசியல் சாசன அதிகாரிகளும், பொது அமைப்புகளும் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதும். அவை இப்படி வெட்ககரமான முறையில் பா.ஜ.க. தலைமையகத்தில் முழுமையாக கையகப்படுத்தப்பட்டிருப்பதும், இந்திய ஜனநாயகத்தில் காணப்படாதது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.