நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணை!! (படங்கள்)
நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பல்வேறு தொடர் திருட்டுக்கள் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மருதமுனை பிரதான வீதியில் உள்ள துவிச்சக்கர வண்டி மற்றும் அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியதுடன் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்களை சூட்சுமமாக திருடி தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி துஸார திலங்க ஜெயலாலுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.
இதற்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த வியாபார நிலையத்தில் இருந்து துவிச்சக்கர வண்டி உதிரி பாகங்களை திருடி சென்று கொக்கட்டிச்சோலை , சாய்ந்தமருது மருதமுனை போன்ற இடங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரால் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சைக்கிள் உதிரி பாகங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
குறித்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”