ஆந்திரா முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1,342 கோவில்கள் கட்ட ஏற்பாடு..!!
திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமர சதா சேவா அறக்கட்டளையுடன், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் சமர சதா சேவா அறக்கட்டளை உதவியோடு மாநிலத்தில் முதல் கட்டமாக ரூ.25 கோடியில் 502 கோவில்களை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டி உள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் அறிவுறுத்தலின்படி மேலும் 1,342 கோவில்கள் ஆய்வு செய்யப்பட்டு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,342 கோவில்களில் 120 கோவில்கள் முதலில் கட்டப்பட்டது. இது தொடர்பான கோவில்களின் பட்டியல், நிலம் கையகப்படுத்துதல், கோவில் கமிட்டி அமைப்பது ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளது, பழங்கால இந்து கோவில்கள் மற்றும் பாழடைந்த கோவில்களை புனரமைப்பதற்கும், நவீனமயமாக்குவதற்கும் ஸ்ரீவாணி அறக்கட் டளை 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.500 கோடிக்கு மேல் காணிக்கை வந்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளையின் காணிக்கை மூலம் கோவில்களில் தேவையான மராமத்துப் பணிகள் மற்றும் தீப பிரசாதம் வழங்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கும் ஸ்ரீவாணி அறக்கட்டளை கூட்டத்தில், கோவில்கள் கட்டுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் சமர சதா சேவா அறக்கட்டளை தலைவர் தாளூரு விஷ்ணு பேசுகையில்:- மாநிலம் முழுவதும் 1,342 கோவில்கள் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார்.