சைவ ஆலயங்களில் வேதங்களோடு தமிழ்த் தோத்திரங்களும் அதிகளவில் இசைக்கப்பட வேண்டும்!!
நல்லூரில் இவ்வாண்டு தொடக்கம் தமிழ் தோத்திரப் பாடல்களுக்கு அதிக முதன்மை வழங்கப்படும் நடைமுறையை கோவிலில் நிர்வாக அதிகாரி ஏற்படுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது எனக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபரும், சைவச் சொற்பொழிவாளருமாகிய செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் ஏனைய ஆலயங்களிலும் ஏற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆகமம் சார்ந்த வழிபாடுகளில் பக்த ஸ்தோத்திரம் என்ற நிலையில் தமிழுக்கும் முதன்மை வழங்கப்பட வேண்டும். எமது மண்ணில் பக்தர்களின் மொழி தமிழாக இருக்கின்றமையால் இது அவசியமானது.
திருக்கேதீஸ்வரத்தில் சேர்.கந்தையா வைத்தியநாதன் திருமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார். போர்த்துக்கேயரால் கோவில் அழிக்கப்பட்ட போது பெருமான் சொற்கோவிலாகவே திகழ்ந்தார் என்பதன் அடையாளம் அது.
ஒவ்வொரு சந்நிதானத்தில் பூசை இடம்பெறும் போதும் தேவாரம் புராணம் பாடும் மரபு திருக்கேதீஸ்வரத்தில் காணப்படுகிறது.
நல்லூரில் தற்போது திருமுறைப் பாடல்கள், அருணகிரியாரின் கந்தரனுபூதி மற்றும் திருப்புகழ் சேனாதிராஜ முதலியார் ஊஞ்சல் வித்துவான் வேந்தனாரின் பள்ளியெழுச்சி, நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நல்லூர் திருப்புகழ், யோகி தவ.கஜேந்திரனின் நல்லூர்த் திருப்புகழ் மற்றும் நல்லைக் கந்தன் கீர்த்தனைகள் எனத் தமிழ்க் கடவுளுக்கு வேத மந்திரங்களுக்கு இணையாக தமிழ்ப் பாக்களும் இசைக்கப்படுகின்றன.
நமது தலைமை ஆலயங்கள் இரண்டிலும் ஏற்பட்ட இந்த மாற்றம் ஏனைய ஆலயங்களிலும் தொற்றுகை அடைய வேண்டும்.
வேத பாராயணத்தின் பின் திருமுறை பாராயணம் செய்து ஆசீர்வாதம் மேற்கொள்ளும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும். குருமாரும் ஆலய பரிபாலகர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய விடயம் இது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.